Recent Posts

Friday, October 12, 2012

1977 மலரும் நினைவுகள் - பகுதி - 3




1977 மலரும் நினைவுகள் - பகுதி - 3
*******************************************

அதிரையில் அடுத்த வீட்டுப் பழக்கம் போல் சாதாரண சக மனிதர்கள் சில நேரங்களில் மனதில் அச்சாக பதிந்து விடுவார்கள். அன்றைய காலத்தில் அதிரையின் ஆர்ப்பரிக்கும் 'நடுத்தெரு' வாசிகளுக்கு இன்றைக்கும் ஞாபகம் இருக்கும் அதில் சில நினைவலைகளை அசைத்து விடுகிறேன்.



அறியப்பட்டவர்களில் – "அம்மாக் கள்ளன்"

இரவில் மட்டுமே வீடுவீடாக சென்று யாசகம் கேட்பார், வீட்டு வாசல் முன் வந்து "அம்மா" என்று அபரிவிதமான சப்தமிட்டு அழைப்பார். அந்த பழகிய சத்தம் கேட்டது வீட்டுக்காரர்களுக்கும் விளங்கிவிடும் அம்மாக்கள்ளன் வந்திருக்கிறார் என்றும். காசோ அல்லது இரவுச் சாப்பாடோ அவருக்கு கொடுக்கப்படும். இரவில் சோறு கொடுத்தால் "பசியாற (அப்பம், இடியாப்பம்) இருந்தா கொடுமா" என்று அடுத்து கேட்பார்.

அதெல்லாம் இல்லை என்று சொன்னால் "உன் மாப்பிள்ளைக்கு மட்டும் கொடுக்கிரியே" என்று அலங்காய்ப்பார்.

சோறு கொடுத்து 'ஆணம்' கொடுக்காவிட்டல் "ஆணம் கொடு" என்று அதட்டலாக கேட்பார்.

'அப்படியொன்னும் இல்லை' என்று சொன்னால்.

அடுத்து "கொக்கு ஆணம் மணக்குது சொட்டுக்கோனு கொடுத்தால் கொரஞ்சா போகும்" என்பார்.

இது அவரின் வழக்கமான தொடர் உரையாடகளில் ஒரு சில.

இவற்றையெல்லாம் விட எதுவுமே கொடுக்காத வீட்டில் வாசலில் உள்ள பல்பை கழட்டிக் கொண்டு போய்விடுவார்.

நல்ல உயரமாக இருப்பார், தலையில் தலைப்பாகை அணிந்திருப்பார், அன்றைய காலங்களில் எங்களைப்போல் சிறுவர்கள் வீடுகளில் அடம்பிடித்தால் "அம்மாகள்ளனிடம் பிடித்து கொடுத்துடுவேன்" என்று எங்கள் அன்றையச் சூழல் உம்மாக்கள் பயமுறுத்துவர்கள்.

அறியப்பட்டவர்களில் அடுத்து - "காக்கரு"

இவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வடநாட்டை சேர்ந்தவர் ஏறக்குறைய நாற்பது வயது இருந்திருக்கலாம். அவரிடம் சென்று பெயர் கேட்டால் "காக்கரு" என்பார். வேறு ஏதேனும் கேட்டாலும் "காக்கரு" என்பார். அதுவே அவரை 'காக்கரு' என்று நாங்களே பெயர் வைத்து அழைத்து வந்தோம்.

கிழிந்த பாவாடை கிழிந்த சட்டை கையில் ஒரு டப்பா இதுதான் அவரின் தோற்றம். உண்மையில் அவரிடம் சிறுவர்களாகிய நாங்கள் அவரின் பெயரை கேட்கும்பொழுது எங்கள் பாசை அவருக்கு புரிந்திருக்காது. அவர் சொலவதும் எங்களுக்கு புரியாமல்தான் அவரின் பெயர் 'காக்கரு' ஆனது.

பின்னர்தான் எங்களுக்கு (ஹிந்தியில் தார் பூசாமல் அமைதியான பின்னர்) அவர் சொன்னது என்னவென்று தெரிய வந்தது. " கியா கரோ?" (என்ன செய்ய?), 'இந்த ஊரில் வந்து மாட்டிக் கொண்டேனே என்ன செய்ய?' என்று அவர் கேட்டதைத்தான் நாங்கள் புரிந்த விதத்தில் தவறாய் "காக்கரு பைத்தியம்" என்று வழக்கானது.

அந்த நாட்களில் சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, சபுராளிங்கதான் அதிகம், துபாய் சவுதி வந்த பின்னர்தான் ஹிந்தி என்னும் மொழி இரயிலடியில் தார் பூசப்பட்டு இருந்தது நமக்கெல்லாம் தெரிந்தது. 


அறியப்பட்டவர்களில் மற்றொருவர் – "உசேன் பாய்"

இவர் நல்ல கடின உழைப்பாளி தெருவில் இருக்கும்  அனைத்து வீட்டு கல்யாணங்களிலும் இவரைப் பார்க்கலாம். பள்ளிவாசலில் இருந்து வாடகைச் சட்டி பாத்திரம் கொண்டு வந்து கல்யாண வீட்டில் சேர்ப்பதும் விருந்து முடிந்ததும் அனைத்து பாத்திரங்களை கழுவி சுத்தம் செய்வதும் அங்கிருக்கும் சமையல்காரகளுக்கு பாகுபாடின்றி உதவுவது என்று மிகக்கடுமையாக உழைப்பார்.

ஒரு நாள் இவரைப் போட்டு சிலர் கூடி அடித்து கொண்டு இருந்தார்கள், என்னவென்று விசாரித்தால் இவர் உண்மையிலேயே ஊர் மக்கள் எதிர்பார்த்த்து போன்று பெயருக்கேற்ற மார்க்கத்தில் இல்லாதவர் என்று. ஆதலால் அவரை அங்கிருந்து அனுப்பிவைத்து விட்டார்கள்.

ஒழுக்க நெறிபோற்றும் தெள்ளத்தெளிவான மார்க்கத்திலே பிறந்து எத்தனையோ சகோதரர்கள் பிறமத பெயர்களை அழைக்கும் பெயர்களாக்கிக் கொண்டு மேலை நாட்டு மோகம் கொண்டு உலகவாழ்க்கையை சுவைக்க துடிக்கிறார்கள் ஏன் இன்னும் அதனை சுவாசித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகப்பானாக!

ஏறக்குறைய ஏழு வருடங்கள் "உசேன் பாயாக" (அதிரையில் கடின  உழைப்பில்) தனது பிழைப்புக்காக பெயரை மாற்றிக் கொண்டவரிடம் "ஷஹாதத் கலிமா" சொல்லிக் கொடுக்காமல் ஊரைவிட்டே வெளியேற்றினோம் இன்று அவர் எப்படி இருக்கிறாரோ !? அல்லாஹ் அறிவான்.

மறக்க முடியுமா செக்கடி பள்ளி ஜாம்பவான்களையும் !? அவர்களை கண்டால் சிறுவர்களாக இருந்த எங்களுக்கெல்லாம் பயம் கலந்த மரியாதை (இன்றைய இளய வயதுடையோரின் ஆவேசம் சில நேரங்களில் அவர்களின் கண்களை மறைக்கிறது பெரியவர்களுக்கு கொடுக்கும் மரியாதை அங்கே இருட்டாகாவே இருந்து விடுகிறது.

எது எப்படியிருந்தாலும் எங்களால் பெரிதும் மதிக்கப்பட்ட மதிப்பிற்குரிய மனிதர்கள்.

  1 பார்லாக்கா
  2 மோமியாக்கா
  3 காலாவை – அபூபக்கர் காக்கா
  4 சென்டியராக்கா
  5 அப்பாஸ் ஹாஜியார்
  6 ஒய்சாக்கா

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் மண்ணறையை பிரகாசமாக்கி அவர்களுக்கு நற்பதவியை கொடுப்பானாக.

மீண்டும் சந்திப்போம்

மு.செ.மு.சபீர் அஹமது


Note! thanks adirai nirubar


No comments:

Post a Comment